Friday, October 30, 2009

காமன் வெல்த்



காமன் மேனை பத்தி ... ஓ .. ஒ .. சாரி காமன் வெல்த் போட்டிகள் மிக சிறப்பாக தொடங்கி உள்ளன .




டில்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான "கவுன்ட்-டவுண்' ஆரம்பமானது. லண்டனில் நேற்று நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் காமன் வெல்த் ஜோதியை இரண்டாம் ராணி எலிசபெத், நமது ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் வழங்கினார். இந்த ஜோதி, தொடர் ஓட்டமாக உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட உள்ளது.





டில்லியில் வரும் 2010, அக்., 3-14ம் தேதி வரை 19வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன. இதில் பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த 71 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதற்கான பணிகள் மிகவும் மந்தமாக நடப்பதாக சர்ச்சை எழுந்தது. இத்தகைய பிரச்னைகளை கடந்து நேற்று லண்டனில் காமன்வெல்த் போட்டிக்கான ஜோதி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.



ஒலிம்பிக் ஜோதியின் வரலாற்றை பார்க்கும் போதே ;



ஒலிம்பிக் ஜோதியை போன்ற காமன்வெல்த் ஜோதி பாரம்பரிய முறைப்படி வழங்கப்படும். "ராணியின் பேட்டன்' என்று அழைக்கப்படும் இந்த ஜோதியில் காமன்வெல்த் அமைப்பின் தலைவரான இரண்டாம் எலிசபெத் ராணி, வீரர்களுக்கு வழங்கும் செய்தி இடம் பெறும். இது துவக்க விழாவின் போது வாசிக்கப்படும். டில்லி போட்டிக்கான ஜோதி நவீன தொழில் நுட்பத்துடன் தங்கம் மற்றும் அலுமினியத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜோதி இருக்கும் இடத்தை தெரிவிக்கும் கருவிகள் மற்றும் கேமரா பொருத்தப் பட்டுள்ளன. இதன் மூலம் படங்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். எஸ்.எம்.எஸ்., பெறும் வசதியும் உண்டு. ரசிகர்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்., களை ஜோதியில் காண முடியும். ராணி வழங்கும் செய்தி 18 கேரட் தங்கத்திலான பழங்கால ஓலைச் சுவடி மாதிரியில் பொறிக்கப் பட்டுள்ளது. மைக்கேல் பாலி என்பவர் வடிவமைத்துள்ளார். டைட்டன் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.





நேற்று லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலில் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பெனல், இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் ஜோதியை வழங்கினார். அதில் வீரர்களுக்கான தனது செய்தியை வைத்தவுடன், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் அளித்தார்.



பின்னர் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ். கில்லிடம், ஜனாதிபதி வழங்கினார். அவர், அதனை காமன்வெல்த் விளையாட்டு ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவரான சுரேஷ் கல்மாடியிடம் வழங்கினார். கல்மாடியிடம் இருந்து ஒலிம்பிக் "தங்க நாயகன்' அபினவ் பிந்த்ரா பெற்றார். இவர் ஓட்டத்தை துவக்கி வைத்தார்.



பின்னர் கபில்தேவ், சானியா மிர்சா, மில்கா சிங், விஜேந்தர் உள்ளிட்ட இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் ஜோதியை பெற்று, ஓடினர். சுமார் 340 நாட்களில் 2 லட்சம் கி.மீ., தூரத்துக்கு ஜோதி பயணம் செய்ய உள்ளது. போட்டி துவங்குவதற்கு 100 நாட்கள் இருக்கும் போது வாகா எல்லை வழியாக இந்தியா வந்தடையும். பின் அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும். 2010, அக்., 3ம் தேதி நடக்கும் துவக்க விழாவின் போது டில்லி வந்து சேரும்.



நேற்று ஜோதி ஓட்டம் துவங்குவதற்கு முன் கலைஞர்களின் வண்ணமயமான நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் ரிக் வேதத்தில் இருந்து சமஸ்கிருத ஸ்லோகங்களை உச்சரித்தனர். பரத நாட்டியம், குச்சிபிடி, கிராமிய நடனம், பஞ்சாப் பங்க்ரா, டான்டியா போன்ற நடனங்கள் இந்திய கலாசாரத்தை பிரதிபலித்தன. ஒட்டுமொத்தமாக பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தில் "மினி இந்தியாவை' பார்க்க முடிந்தது.